Tamil Nadu News Today Updates: ‘இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ – ரஜினி, கமல் அதிரடி

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Nov 19, 2019, 10:38:29 PM

Flash News in Tamilnadu Today Updates: நாடாளுமன்ற இரு அவைகளின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடாமல், மக்களின் நம்பிக்கை மற்றும் இதயத்தை வெல்ல முடியும்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவின், 250வது கூட்டத் தொடரை முன்னிட்டு, ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பேசியதாவது:தேசிய வளர்ச்சியில், ராஜ்யசபாவின் பங்கு மிக முக்கியமானதாகும். ‘ராஜ்ய சபா என்பது இரண்டாவது சபை தான்; ஆனால், இரண்டாம் நிலை சபை அல்ல’ என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.நாட்டின் ஜனநாயக மரபை காப்பாற்றும் வகையில், இந்த சபையில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.சமீபத்தில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது உட்பட, பல உதாரணங்களை கூறலாம். நாட்டின் நலன் என்று வரும்போது, ராஜ்யசபா முந்திக் கொள்ளும். முத்தலாக் மசோதா நிறைவேறாது என, கூறினார்கள். ஆனால், ராஜ்யசபா அதை நிறைவேற்றியது.அதே நேரத்தில், விவாதிப்பது, முடக்குவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்த சபை செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி, டிசம்பர், 2ல் அறிவிக்கப்படும் என்றும், டிச.13க்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும், மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்’ என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:29 (IST)19 Nov 2019
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:44 (IST)19 Nov 2019
நாற்று நட்டு போராட்டம்

காரைக்குடியில் சாலையைச் சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21:29 (IST)19 Nov 2019
3 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

21:12 (IST)19 Nov 2019
சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது - கிஷன் ரெட்டி

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில், பொதுமக்களின் நன்மைக்காக சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

21:04 (IST)19 Nov 2019
விலை உயர்த்துகிறதா ஜியோ?

ஏர்டெல், வோடபோன் - ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து தொலைத்தொடர்பு கட்டணங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அடுத்த சில வாரங்களில் உயர்த்த உள்ளதாக தகவல்.

21:03 (IST)19 Nov 2019
இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே

கோத்தபயாவை, கொழும்புவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஜெய்சங்கர் அளித்தார்.

இதையேற்ற கோத்தபயா, இந்தியாவுக்கு வரும் 29ம் தேதி வருகை தர ஒப்புக் கொண்டார்.

20:48 (IST)19 Nov 2019
கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன்

கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

20:29 (IST)19 Nov 2019
நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்

நான் அனைத்து மக்களுக்குமான அதிபர். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20:29 (IST)19 Nov 2019
எங்களுக்கு கவலையில்லை

ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

19:47 (IST)19 Nov 2019
கமலுடன் இணைய தயார் - ரஜினி

'கமல்ஹாசனுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்' என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தேவை ஏற்பட்டால் ரஜினியுடன் இணைய தயார் என்று கமல் கூறியிருந்த நிலையில், தற்போது ரஜினியும் அதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 

19:27 (IST)19 Nov 2019
டெல்லியில் நில அதிர்வு

டெல்லியில் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்

19:26 (IST)19 Nov 2019
அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் - ரூ.1,10,26,315 வருமானம்

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் இன்று கணக்கிடப்பட்டதில், தங்கம் - 243 கிராம், வெள்ளி - 706 கிராம் மற்றும் ரொக்கம் ரூ.1,10,26,315 வருமானம்

19:25 (IST)19 Nov 2019
குளிர்விக்கும் கனமழை

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் ஆகிய பகுதிகளில் கனமழை

19:24 (IST)19 Nov 2019
தொழில் செய்ய தடை இல்லை

எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயம் பெற்றவர்கள் ஹோமியோபதி மருத்துவர்களாக தொழில் செய்ய தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

19:05 (IST)19 Nov 2019
தேவைப்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்

'ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

19:00 (IST)19 Nov 2019
திருமாவளவன் கோரிக்கை மனு

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக, உயர் விசாரணை கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் திருமாவளவன் கோரிக்கை மனு.

18:59 (IST)19 Nov 2019
மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கினால், 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்குமா என்ற விவகாரத்தில், தெளிவான வழிகாட்டுதல் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்

18:59 (IST)19 Nov 2019
தமிழக அரசு அறிவிப்பு

சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் அரிசி பெறக்கூடிய வகையில் குடும்ப அட்டைகளை மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை,குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26-ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலித்து அரிசி அட்டைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:58 (IST)19 Nov 2019
திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக பார்வையிடலாம்

தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு வரும் 25ம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்

18:56 (IST)19 Nov 2019
அரசு மருத்துவமனையில் குழந்தையை காட்ட ரூ. 1000 லஞ்சம் கேட்ட நர்ஸ்

மதுரை - அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் உறவினர்களிடம் குழந்தையை காட்ட ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக லஞ்சம் கேட்டதாக நர்ஸ் கார்த்திகா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சங்குமணியிடம் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்குமணி, உறுதி அளித்துள்ளார்.

18:56 (IST)19 Nov 2019
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் தொடர்புடைய சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் அவரின் மகன் ரிஷிகாந்த் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதி சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாக கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. இதைக்கேட்டுக்கொண்ட நீதிபதி மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதுவரை மாணவன் மற்றும் அவரின் தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

18:55 (IST)19 Nov 2019
6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்

சேலம் - ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கம் எழுப்பினர்.

17:55 (IST)19 Nov 2019
குற்றவாளி சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

திருச்சி : வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டரை திருடிய வழக்கு தொடர்பாக குற்றவாளி சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

17:54 (IST)19 Nov 2019
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நாளை விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

17:53 (IST)19 Nov 2019
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

17:53 (IST)19 Nov 2019
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி கோரிய மனு : தமிழக பதிவுத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

17:52 (IST)19 Nov 2019
தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள் - கோவையில் தனியார் மருத்துவமனையில் நடந்த சிகிச்சை

புதுச்சேரியை சேர்ந்த 48 வயதான தந்தை, கல்லீரல் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொறியியல் மாணவியான இவருடைய மகள் தமது தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கல்லீரலை தானமாக கொடுத்த அந்தப் பெண் குணமடைந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

17:52 (IST)19 Nov 2019
ரூ.30.4 கோடி நிதி

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க ரூ.30.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு

17:51 (IST)19 Nov 2019
கஜா புயல் பாதிப்பில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஆய்வறிக்கை வெளியிட்டார் முதலமைச்சர்

கஜா புயல் பாதித்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் வருவாய் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

17:22 (IST)19 Nov 2019
உள்துறை அமைச்சகம்

2019ல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு. இயற்கைச் சீற்றங்களால் 15,729 கால்நடைகள் உயிரிழப்பு. 8 லட்சம் வீடுகள் சேதம். தமிழகத்தில் விளைநிலங்களின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

17:15 (IST)19 Nov 2019
திமுக ட்வீட்
16:56 (IST)19 Nov 2019
முரசொலி இட விவகாரம்

”முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்” என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

16:41 (IST)19 Nov 2019
சபரிமலையில் 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்

இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தையுடன் குழுவாக சபரிமலைக்கு வந்தார். பம்பையில் சோதனை செய்த போலீசார் அந்த சிறுமிக்கு 12 வயது ஆவதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சிறுமியின் தந்தை மட்டும் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் மகளை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர்.

16:33 (IST)19 Nov 2019
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம்மிடம் இல்லை - ஜோதிமணி எம்.பி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என மக்களவையில் கரூர் எம்.பி., ஜோதிமணி  உருக்கமாக கூறினார். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம் நாட்டில் இல்லை என்றும் ஜோதிமணி குறிப்பிட்டார்.

15:46 (IST)19 Nov 2019
நீட் வழக்கு

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், மாணவனின் விரல் பதிவையும், தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

15:31 (IST)19 Nov 2019
சர்க்கரை வாங்கும் கார்டுகளை அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் . தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

15:10 (IST)19 Nov 2019
கனிமொழியின் மனு தள்ளுபடி

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. சந்தானகுமாரின் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

14:53 (IST)19 Nov 2019
லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

14:34 (IST)19 Nov 2019
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைவு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

14:19 (IST)19 Nov 2019
ஜெயக்குமார் பேட்டி

இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் என்றார். அதோடு, ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம், ஆனால் எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும் எனவும் கூறினார். 

14:06 (IST)19 Nov 2019
உள்ளாட்சி தேர்தல் : திமுக வேட்பு மனு

உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட வரும் 27-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் எனவும், மாவட்ட கழக செயலாளர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அறிவித்துள்ளது 

13:31 (IST)19 Nov 2019
ஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருக்கிறார் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருக்கிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, புதுச்சேரியில் விதிகளை மீறி நடக்கும், அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வர் முன்னாள் ராணுவ வீரர் உதவித்தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

12:47 (IST)19 Nov 2019
மதுரை, சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:01 (IST)19 Nov 2019
முரசொலி விவகாரம் : தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம்

முரசொலி அலுவலக இட விவகாரம் தொடர்பாக, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மாலை 3 மணிக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

11:37 (IST)19 Nov 2019
இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஸ்வநாதன் கூறியதாவது, இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான். பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் என அவர் மேலும் கூறினார்.

11:16 (IST)19 Nov 2019
சிதம்பரம் கோயில் விவகாரம் – தீட்சிதர் தர்ஷன் 3 மாதம் சஸ்பெண்ட்

சிதம்பரம் நடராஜர் கோயில், பெண் பக்தரின் கன்னத்தில் தீட்சிதர் தர்ஷன் அறைந்த விவகாரம் தொடர்பாக, கோயில் நிர்வாகம், தீட்சிதர் தர்ஷனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

10:47 (IST)19 Nov 2019
புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் – ராமதாஸ்

புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்  என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும். 

பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைப்படி திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மலரட்டும்! என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

10:18 (IST)19 Nov 2019
ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ரியல் தலைவர்

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி ரியல் தலைவராக திகழ்ந்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

10:09 (IST)19 Nov 2019
இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். 

09:47 (IST)19 Nov 2019
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.13 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் உள்ளது.

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : ரஜினி, கமல் இணைந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார். ஜெயகுமார் கூறியதாவது:அதிர்ஷ்டம் ஏற்படலாம்; அதிசயம் ஏற்படலாம்' என்று, ரஜினி நம்பலாம். நாங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. 2021ல் மீண்டும், அ.தி.மு.க.,வை, மக்கள் ஆட்சியில் அமர்த்துவர். இதைத் தான் அதிசயம் என்று ரஜினி கூறியிருக்கலாம். சகாப்தம் என்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. எங்களை தொட்டால், அவர்கள் தான் துார செல்வர். நடிகர் ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்தால், அது ரஜினிக்கு பலவீனம். ரஜினியும், கமலும் சேர்ந்தாலும், எங்களை அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்; எங்கள் பயணம் தொடரும்; என்றைக்கும், ஜெ., ஆட்சி தொடரும். மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத இயக்கமாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற கட்சியாக, ஆட்சியாக, அ.தி.மு.க., உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

சபரிமலையில் முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்,'' என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். நடை திறந்த முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 50 சதவீதம் அதிகம். காணிக்கை, அப்பம், அரவணை என எல்லா வகையிலும் வருமானம் அதிகரித்துள்ளது. காணிக்கையாக மட்டும் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில் ஒரு கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

Web Title:Tamil nadu news today live updates weather modi parliament sabarimala panneer selvam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X