Tamil News Updates : இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu News today live updates : தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்று கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 பைசாக்கள் அதிகரித்து ரூ. 103.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ. 99.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன், முருகன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். உதவியாளர் சரவணனின் சென்னை நந்தனம் வீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
8:28 (IST) 22 Oct 2021
இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ.29.77 லட்சம் பணம், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது.

7:37 (IST) 22 Oct 2021
அதிமுகவை அழிக்க திமுகவின் தொடர் முயற்சிகள் முறியடிக்கப்படும் – எடப்பாடி பழினிச்சாமி

இளங்கோவன் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியோடு சோதனை நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவை அழிக்க திமுகவின் தொடர் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

6:43 (IST) 22 Oct 2021
உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், கடலில் மூழ்கி உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் நிவாணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6:38 (IST) 22 Oct 2021
சூர்யாவின் ஜெய் பீம் டிரெய்லர் வெளியீடு

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா பழங்குடியினருக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக நடித்துள்ள நிலையில், இதன் டீசர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. நீதிக்கு ஆதரவான வார்த்தைகளைவிட, அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது என்ற வசனம் வரவேற்பை பெற்று வருகிறது.

4:46 (IST) 22 Oct 2021
பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்கிறார்” என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

3:46 (IST) 22 Oct 2021
அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைது எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

கரூரில் காவல் துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உள்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3:33 (IST) 22 Oct 2021
அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை; ஐகோர்டில் தமிழக அரசு தகவல்

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

3:05 (IST) 22 Oct 2021
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: அதிமுகவினர் கவலைப்படவில்லை – செல்லூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: “அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.

2:19 (IST) 22 Oct 2021
ஆற்காடு ஒன்றியக் குழு தலைவராக புவனேஸ்வரி சத்தியநாதன் தேர்வு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ம் தேதி வெளியானது. அதில், திமுக ஸ்வீப் செய்து பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று ஒன்றியக் குழு தலைவர்களை தேர்ந்தெடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு ஒன்றியத்தின் தலைவராக திமுக உறுப்பினர் புவனேஸ்வரி சத்தியநாதன் ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2:03 (IST) 22 Oct 2021
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 19 மாடியில் இருந்து தப்பிக்க குதித்தவர் பலி

மும்பை கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் உள்ள 19 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிற்பகல் 12 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த தீ விபத்தில் 19-வது மாடியில் ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மும்பை தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளார். அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1:30 (IST) 22 Oct 2021
பட்டாசு வெடிக்கும் நேரம் – இன்று முடிவு!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் நிர்ணயிப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:28 (IST) 22 Oct 2021
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை 23-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், ஆகிய மழை பெய்யக்கூடும். மேலும், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1:10 (IST) 22 Oct 2021
“தண்ணீர் திருட்டு – குற்றவியல் நடவடிக்கை“ – சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்!

தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

12:38 (IST) 22 Oct 2021
“எனது மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு என்பது உண்மையல்ல” – வைகோ

தனது மகனுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது குறித்து வைகோ விளக்கம் கொடுத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “எனது மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு என்பது உண்மையல்ல. ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, பொறுப்பு வழங்கப்பட்டது” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

12:32 (IST) 22 Oct 2021
அதிமுக ஆதரவுடன் வென்ற திமுக உறுப்பினர்!

ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக ஆதரவுடன் திமுக வெற்றி பெற்றது.

ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட திமுகவின் சங்கீதா பாரி அதிமுகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

12:08 (IST) 22 Oct 2021
புதிய வலைதளங்கள் தொடக்கம்!

தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் உருவாக்கப்பட்ட வலைதளங்கள், மற்றும் மென்பொருள்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இ – முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் ஆகிய வலைத்தளங்களையும், கீழடி – விசைப்பலகை, தமிழி – தமிழணையம் ஒருங்குமாற்றி போன்ற மென்பொருள்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

11:47 (IST) 22 Oct 2021
மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் மோதல்!

மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. திமுகவின் இரு பிரிவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

11:23 (IST) 22 Oct 2021
நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை – மத்திய அரசு குழு

நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு ஏதும் இல்லை. உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று தடுப்பூசிய் குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசு குழு அறிவித்துள்ளது.

11:21 (IST) 22 Oct 2021
மறைமுக இந்தித் திணிப்பில் ஈடுபடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்

கல்வி நிலையங்களின் வழியாக இந்தி திணைப்பை மேற்கொள்வதும், இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காத மாநிலங்களில் மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்வதையும் மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

10:54 (IST) 22 Oct 2021
ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மீது புகார் அளித்தவர்கள் ஏன் ஆதாரங்களை வெளியிடவில்லை என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

10:28 (IST) 22 Oct 2021
30% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது

18 வயதுக்கு மேற்பட்டோரில் 30% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது.

10:24 (IST) 22 Oct 2021
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

நவம்பர் மாதம் 20 முதல் 28 தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளா 52வது சர்வதேச திரைப்பட விழாவில் ஓ.டி.டி. தளங்களும் பங்கு கொள்ளும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

10:15 (IST) 22 Oct 2021
மக்களின் ஒத்துழைப்பு தான் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆயுதம்

பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினார்கள். ஆனால் இந்தியாவில் மக்களின் அதிகப்படியான பங்கேற்பு தொற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாக மாறியது. மக்களிடம் ஒத்துழைப்பு இருந்த காரணத்தால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமானது. 100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை 130 கோடி மக்களையும் சாரும் என்று மோடி அறிவிப்பு

10:11 (IST) 22 Oct 2021
100 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல; நிரூபணம் – மோடி உரை

கொரோனா தொற்று ஏற்பட்ட போது இந்தியா இந்த சூழலை எப்படி சமாளிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் நிலவியது. ஆனால் இன்று இந்த 100 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல. அவர்கள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் என்று பிரதமர் மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

When the pandemic hit the world, there were lot of apprehensions over India’s ability to deal with the situation. But 100 cr vaccine dose is an answer to every questions raised over it @narendramodi
— Liz Mathew (@MathewLiz) October 22, 2021
9:47 (IST) 22 Oct 2021
டிசம்பர் 1ம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயர்வு

டிசம்பர் 1ம் தேதி முதல் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக தீப்பெட்டி ஒன்றில் விலை ரூ. 2 ஆக உயர்த்தப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

9:44 (IST) 22 Oct 2021
தொடர்மழை காரணமாக ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்ற காரணத்தால் ஒகேனக்கலில் நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

9:24 (IST) 22 Oct 2021
சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்கக் கோரி முதல்வர் கடிதம்

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக டை அம்மோனியம் பாஸ்போட் உரங்களின் உற்பத்தி மற்றும் வரத்து குறைவாக உள்ளது. கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உரத்தட்டுப்பாடு நிலவி வருகின்றது. தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய உரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

9:20 (IST) 22 Oct 2021
வாழப்பாடியில் அதிமுக நிர்வாகி குபேந்திரன் வீட்டில் சோதனை

வாழப்பாடியில் அதிமுக நிர்வாகி குபேந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் வேளாண்மை உற்பத்தியாளார் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.

9:10 (IST) 22 Oct 2021
ஒரே ரேஷன் கார்டு திட்டம் – சக்கரபாணி கருத்து

மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வட மாநில மக்கள் மட்டுமே அதிக அளவில் பயன் அடைந்துள்ளனர். தமிழக மக்களுக்கு சொற்பமான அளவில் மட்டுமே பயன்கள் கிடைத்துள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

9:07 (IST) 22 Oct 2021
இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாடுகிறார் மோடி

கொரோனா தடுப்பூசி 100 கோடி டோஸ் என்னும் மைல் கல்லை எட்டிய நிலையில் இன்று காலை 10 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

8:59 (IST) 22 Oct 2021
ஜெயலலிதாவின் உருவச்சிலையை தமிழ்நாடு அரசே பராமரிக்கும் – அமைச்சர் பொன்முடி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்க்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு தேவையான பராமரிப்பை தமிழக அரசே வழங்கும். மேலும் ஜெ சிலைக்கு உரிய மரியாதை செலுத்தப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பதில் அறிவித்துள்ளார்.

8:52 (IST) 22 Oct 2021
7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை, மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Web Title: Tamil nadu news today live updates weather rain politics dvac raids

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com