Tamil Nadu news updates: ஜெ.சமாதியில் தலைவர்கள் அஞ்சலி

Petrol Diesel Price: சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77 .91 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69. 53 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Dec 5, 2019, 4:01:38 PM

Tamil Nadu news today updates : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்த 17 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கிய அவர், தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த வழக்கில் கைதான சிவசுப்பிரமணியனுக்கு டிசம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.எ.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.

Live Blog
Tamil Nadu news today updates, Chennai rains, TN politics, local body elections : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:08 (IST)04 Dec 2019
ஜெ.சமாதியில் தலைவர்கள் அஞ்சலி

ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் தலைவர்கள் அஞ்சலி.

எடப்பாடி, ஓ.பி.எஸ் காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் இருந்து அஞ்சலி ஊர்வலம் தொடக்கம். 10:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி.

டிடிவி தினகரன் காலை 11 மணிக்கு அண்ணாசிலையில் இருந்து ஊர்வலம் தொடக்கம். பின்னர் சமாதியில் அஞ்சலி.

ஜெ.தீபா, மாதவன் காலை 7:30 மணிக்கு ஜெ. சமாதியில் அஞ்சலி

22:06 (IST)04 Dec 2019
சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

மண்ணடியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது அந்தக் காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, கிண்டி, ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் இருந்து, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனால், அப்பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.

21:42 (IST)04 Dec 2019
சோனியாவை சந்தித்த ப.சிதம்பரம்

சோனியா காந்தி வீட்டுக்கு ப.சிதம்பரம் வருகை தந்துள்ளார்.  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளிவந்த பின் சந்தித்துள்ளார்.

21:40 (IST)04 Dec 2019
விரைவு நீதிமன்றம் அமைக்க அனுமதி

ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

21:22 (IST)04 Dec 2019
சீமானுக்கு எதிராக அவதூறு வழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு. செப். 14இல் பேட்டியளித்த சீமான் அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக அவதூறு வழக்கு.

21:07 (IST)04 Dec 2019
சூடானில் தீ விபத்து - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சூடானில் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், காணாமல் போன தமிழர்கள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர்கள் பலி குறித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

20:41 (IST)04 Dec 2019
மனுக்கள் நாளை விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் தொகுதி மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக்கோரி திமுக மற்றும் 8 வாக்காளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை.

20:40 (IST)04 Dec 2019
11ம் தேதி விண்ணில் ஏவப்படும்

இஸ்ரோ தயாரித்த பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டானது வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களுடன் வரும் 11ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

20:40 (IST)04 Dec 2019
பாலியல் வன்கொடுமை விவகாரம்

கோவையில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் : 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கார்த்திக் என்பவர் கைது.

20:16 (IST)04 Dec 2019
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, அவர் டெல்லி திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

20:01 (IST)04 Dec 2019
கடற்படை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்

புதுடெல்லியில் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங்கின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கடற்படை தின வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

19:29 (IST)04 Dec 2019
சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் ஆறுதல்

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் திங்கள்கிழமை தடுப்புச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 17 பேர் மரணத்திற்கு காரணமான வீட்டு உரிமையாளர் மீது ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்ககூடாது என்று கேள்வி எழுப்பினார். தலித்துகள் அரசியல் அதிகாரத்திற்கு வராதவரை அவர்களது கோரிக்கைகள் மூன்றாம் பட்சமாகவே பார்க்கப்படும் என்று கூறினார்.

18:45 (IST)04 Dec 2019
சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலி; தீ விபத்து பற்றி தகவல் அறிய தொடர்பு எண் அறிவிப்பு

சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சூடான் தீ விபத்து தொடர்பாக தகவல் அறிய 249-921917471 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட் செய்துள்ளார்.

17:56 (IST)04 Dec 2019
சூடான் விபத்தில் இந்தியர் பலியானதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருத்தம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: சூடானில் தலைநகர் கர்த்தோம் பஹ்ரி பகுதியில் உள்ள “சலூமி” என்ற செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தில் பற்றிய சோகமான செய்தி கிடைத்துள்ளது. இதில் சில இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டார்கள். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தப்படுகிறோம். என்று தெரிவித்துள்ளார்.

17:51 (IST)04 Dec 2019
சூடான் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கே பணிபுரிந்த 23 பேர் பலி; அதில் 18 பேர் இந்தியர்கள்

சூடான் தலைநகர் கர்த்தோமில் ஒரு செராமிக் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு டேங்கர் லாரி தீப்பிடித்து எந்து வெடித்ததால் தொழிற்சாலை முழுவதும் பரவியது. இந்த தீவிபத்தில் 23 படு பலி; 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.

17:00 (IST)04 Dec 2019
திட்டக்குடி வெள்ளாற்றில் குப்பைகளைக் கொட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்!

திட்டக்குடி வெள்ளாற்றில் குப்பைகளை கொட்டிய விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

16:15 (IST)04 Dec 2019
நித்தியானந்தாவை தேடுவதற்காக இண்டர்போல் உதவியை நாட முடிவு

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவை குழந்தைகள் கடத்தல் மற்றும் தவறாக அடைத்துவைத்தல் வழக்கில் குஜராத் போலீசார் தேடிவரும் நிலையில் அவர் இடத்தை அறிவதற்காக இண்டர்போல் உதவியை நாட இந்திய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

16:04 (IST)04 Dec 2019
தமிழகத்தில் சாலை வசதி இல்லாத கிராமம்; பிரசவத்திற்காக பெண்ணை தூளி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்

ஈரோடு புர்கூரில் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக 6 கி.மீ தூரம் தூளி கட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது. கிராம வாசிகளுடன் அந்த பெண்ணின் கணவர் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு செல்ல மலையில் ஏறினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்.

15:51 (IST)04 Dec 2019
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய இளைஞரை நேரில் பாராட்டிய முதல்வர்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 வின்கலத்தின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியனை தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டினார்.

15:48 (IST)04 Dec 2019
பொன் மாணிக்கவேலுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம்

பொன் மாணிக்கவேலுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைந்ததால் உடனடியாக ஆவணங்களை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு எனவும் கடிதத்தில் அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

15:44 (IST)04 Dec 2019
ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சி - ராகுல் காந்தி டுவிட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று டுவிட் செய்துள்ளார்.

14:53 (IST)04 Dec 2019
ஆரணி எஸ்.ஐ. ஜமீஸ்பாபு இடமாற்றம்

மணல் கொள்ளையர்களிடம் பேர‌ம் பேசியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, ஆரணி எஸ்.ஐ. ஜமீஸ்பாபுவை ஆயுத படைக்கு மாற்றம் செய்து திருவண்ணாமலை எஸ்.பி. சக்கரவர்த்தி உத்தரவு

14:44 (IST)04 Dec 2019
அரிசி பணம் விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

புதுச்சேரியில் 6 மாத இலவச அரிசிக்கான பணம் 1 வாரத்துக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

14:30 (IST)04 Dec 2019
இறந்தவரின் உடலை ரயிலில் எடுத்துச் செல்லலாம் - பியூஷ் கோயல்

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது  உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த வசதி பல ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

14:20 (IST)04 Dec 2019
முதல்வர் பாராட்டு

நாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனை நேரில் அழைத்து பாராட்டினார் முதல்வர் பழனிசாமி

14:08 (IST)04 Dec 2019
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 928 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பெற்றார் கோலி. 

13:48 (IST)04 Dec 2019
குட்கா முறைகேடு வழக்கு

குட்கா முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு முன்னாள் டிஜிபி உள்ளிட்ட சில அதிகாரிகள் கடிதம்

13:43 (IST)04 Dec 2019
மோடியுடன் திமுக எம்.பி-க்கள் சந்திப்பு

தமிழக பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு, மாநிலத்தில் ஆறுகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல். 

13:05 (IST)04 Dec 2019
இந்தி கட்டாய பாடமல்ல

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உட்பட பல மொழிகள் கற்று தரப்படுகின்றன என்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

12:52 (IST)04 Dec 2019
தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 665 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 296 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 320 ரூபாயாக உள்ளது. 

12:37 (IST)04 Dec 2019
75 கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள்

தமிழகத்தில் புதிதாக 75 கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஒவ்வொரு கிளை நிலையத்திற்கும் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

12:25 (IST)04 Dec 2019
தமிழகம், புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை

தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

12:02 (IST)04 Dec 2019
அடுத்த ஆண்டு ரஜினி கட்சி தொடங்குவார்

ரஜினி ஆழமாக சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர் என்றும், அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்றும், ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன் பேட்டி. 

11:52 (IST)04 Dec 2019
6 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் 6 பேர் பலி என எஸ்.பி. மோகித் கார்க் தகவல்

11:30 (IST)04 Dec 2019
மறைமுக தேர்தல் முறைக்கு எதிராக வழக்கு

உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளனர். வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், வழக்கை பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

11:13 (IST)04 Dec 2019
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக மனு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

10:47 (IST)04 Dec 2019
தமிழும், சமஸ்கிருதமும் கடவுளின் இரு கண்கள்

”தமிழ் மொழிக்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே தேவையற்ற சண்டையை சிலர் உருவாக்குகிறார்கள்; தமிழும், சமஸ்கிருதமும் கடவுளின் இரண்டு கண்கள் போன்றவை, இரண்டுக்கும் இடையே சண்டை ஏற்படக் கூடாது!" எனத் தெரிவித்துள்ளார் நித்யானந்தா. 

10:42 (IST)04 Dec 2019
கூடுதலாக 51 கப்பல்களுக்கு ஒப்பந்தம்

இந்திய கடற்படையிடம் 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனவும், தூத்துக்குடியில் கடற்படைக்கான தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கடற்படை அதிகாரி குமார் தெரிவித்துள்ளார். 

10:24 (IST)04 Dec 2019
ஏமாத்தி ஏமாத்தி டயர்டாகிடனும் - நித்யானந்தா

தன்னைச் சுற்றி எவ்வளவு சர்ச்சைகள் எழுந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், சரியாக 7 மணிக்கு ஆன்லைனில் ஆஜராகும் நித்தி இதுநாள் வரை தியான வகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது தன்னை விமர்சிப்பவர்களை பற்றியும் பேசி கலகலப்பூட்டி வருகிறார். ஏமாற்றி, ஏமாற்றி அதனால் வரும் சலிப்பால் மட்டும் அதனை விட வேண்டும் எனவும் சமீபத்திய வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

10:02 (IST)04 Dec 2019
சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்

வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது போடப்பட்ட வழக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் என்பதற்கு பதில் கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல் என வழக்கு மாற்றம்.

09:44 (IST)04 Dec 2019
கடற்படை தினம் - மோடி ட்வீட்

கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவானதாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

09:40 (IST)04 Dec 2019
விக்ரம் லேண்டரை முன்பே இஸ்ரோ கண்டுபிடித்து விட்டது

விக்ரம் லேண்டரை நமது ஆர்பிட்டரை கொண்டு முன்பே கண்டுபிடித்துவிட்டோம், இது குறித்த தகவலும் முன்பே இஸ்ரோ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

09:24 (IST)04 Dec 2019
முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி

உபரி நீரை வெளியேற்ற வாய்ப்பு இருப்பதால் பாலாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

08:57 (IST)04 Dec 2019
Kailaasa: புது நாட்டை உருவாக்கி பிரதமராகும் முயற்சியில் நித்யானந்தா

சர்சைகளுக்கு பெயர் போன நித்யானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துக்களுக்காக 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக ‘கைலாசா’ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

08:52 (IST)04 Dec 2019
ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். தானியங்கி கார்கள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் உள்ளன. 'ஆல்பபெட்' நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவன சி.இ.ஓ பொறுப்புடன் கூடுதலாக ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பையும் கவனிக்கவிருக்கிறார் சுந்தர். 

தேமுதிக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து 2013 - 2014 ஆண்டுகளில் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 2012 -2016 வரை தமிழக அரசு சார்பில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றுடன் பிற வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விஜயகாந்த் மீதான இந்த வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் மற்ற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Web Title:Tamil nadu news today live updates weather update local body elections sundar pichai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X