scorecardresearch

TN news highlights : “கர்நாடக மக்களும், தமிழக மக்களும் ஒரு தாய் பிள்ளைகள்” – பிரேமலதா விஜயகாந்த்

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu live today : தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீண்டும் திறக்கலாமா என்ற ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ. 99.47க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் 18 காசுகள் குறைந்து ரூ. 93.84 க்கு விற்பனையாகி வருகிறது.

சென்னையில் மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பாதைகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
20:03 (IST) 20 Aug 2021
இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல்

கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சைடஸ் கேடிலா தடுப்பூசிக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

20:01 (IST) 20 Aug 2021
தமிழகத்தில் மேலும் 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 24 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

20:01 (IST) 20 Aug 2021
கர்நாடக மக்களும், தமிழக மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் – பிரேமலதா

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஓசூரில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து டிராக்டரில் வந்த அவர், கர்நாடக மக்களும், தமிழக மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் என கூறினார்.

18:16 (IST) 20 Aug 2021
அதிமுகவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

10 ஆண்டுகள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்திய அதிமுகவினர் தற்போது 2 மாதங்களில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டுபிடித்துவிட்டார்களா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

18:15 (IST) 20 Aug 2021
கட்டட சேதாரங்களுக்கு பொறுப்பேற்க முடியாது; சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருபில் அரசு அனுமதியுடன் தான் தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்பட்டன; கட்டட சேதாரங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

17:41 (IST) 20 Aug 2021
சிவசங்கர் பாபா வழக்கை விசாரித்த சிபிசிஐடி டிஎஸ்பி இடமாற்றம்

சிவசங்கர் பாபா வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

16:17 (IST) 20 Aug 2021
ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி முடக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, 1.5 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா முடகியுள்ளது. அதே போல, உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் நிதியுதவியும் முடக்கப்பட்டுள்ளது.

16:14 (IST) 20 Aug 2021
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி நியமனம் – அந்நாட்டு மன்னர் உத்தரவு

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரியை நியமித்து அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்பை சரியாக கையாளாததால் முகம்மது யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

16:13 (IST) 20 Aug 2021
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் அறிக்கையை பிப்ரவரிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்பிக்கவேண்டும்; இனி கால நீட்டிப்பு இல்லை என்று நீதிபதி அருணா ஜெயகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

14:40 (IST) 20 Aug 2021
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்வதாகவும் இதனால் ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

14:17 (IST) 20 Aug 2021
தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை- சுகாதாரத்துறை செயலர்

தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 2.7கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

14:11 (IST) 20 Aug 2021
ராகுல்காந்தி பதிவிட்ட சமூகவலைதள பதிவு நீக்கம்

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்ட சமூகவலைதள பதிவு நீக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளியிட்டதாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.

13:59 (IST) 20 Aug 2021
மேகதாது விவகாரம்- தேமுதிக போராட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக, கர்நாடக அரசைக் கண்டித்து ராம்நகர் பகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

13:56 (IST) 20 Aug 2021
மீனவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்கவே மீன்வள சட்டம்- எல் முருகன்

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவே மீன்வள சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

13:27 (IST) 20 Aug 2021
ஒண்டிவீரன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்தவர் ஒண்டிவீரன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

13:16 (IST) 20 Aug 2021
ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே மகப்பேறு விடுப்பில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

13:15 (IST) 20 Aug 2021
கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12:33 (IST) 20 Aug 2021
ஆன்மீக சுற்றுலாவை அதிகரித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பேசியவர், ஆன்மீக சுற்றுலாவை அதிகரிப்பதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பயத்தால் நம்பிக்கையை ஒடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12:25 (IST) 20 Aug 2021
தண்டனை கிடைக்க வேண்டும்

உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்றுகூறி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோடநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.

12:22 (IST) 20 Aug 2021
அனல்மின் நிலையம் ஆய்வு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அங்குள்ள செயல்பாடுகள் குறித்து பல விவரங்களையும் கேட்டறிந்தார்.

12:21 (IST) 20 Aug 2021
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

12:19 (IST) 20 Aug 2021
கொரோனா விழிப்புணர்வு முகாம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையின் கொரோனா விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டது. பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது,

11:06 (IST) 20 Aug 2021
இந்தியா 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி பரிசோதனை

இந்தியாவில் 12 முதல் 17 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

10:48 (IST) 20 Aug 2021
மின்னணு சாதனங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல்

2015ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரையில் தமிழக காவல்துறை பயன்பாட்டிற்காக மோடம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக எஸ்.பி. உள்ளிட்ட 14 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10:31 (IST) 20 Aug 2021
தங்க விலை உயர்வு

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 8 அதிகரித்து, ரூ. 35720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறத். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,465 ஆக உள்ளது.

10:20 (IST) 20 Aug 2021
சென்செக்ஸ் 445.02 புள்ளிகள் சரிந்தது

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 445.02 புள்ளிகள் சரிந்து 55,184.47 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 147.10 புள்ளிகள் சரிந்து 16,421.75 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.

09:33 (IST) 20 Aug 2021
24 மணி நேரத்தில் 36571 நபர்களுக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 540 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 39,555 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

09:31 (IST) 20 Aug 2021
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல் இடத்தில் உள்ள நிலையில் சென்னைக்கு இரண்டாம் இடம்.

08:58 (IST) 20 Aug 2021
திமுக ஆட்சி, அதிக காரம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சி இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் கலந்து இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணாமாகவே கொடநாடு வழக்கை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இது போன்ற செயல்களை விடுத்து திமுக அரசு மக்கள் பணிகளை தொடர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

08:31 (IST) 20 Aug 2021
மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 4693 கன அடியில் இருந்து 5352 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.45 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.72 டி.எம்.சி. நீர் வெளியேற்றம் 12,700 கன அடியாக உள்ளது.

08:29 (IST) 20 Aug 2021
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 14 எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்

பெகாசஸ், வேளாண் சட்டங்கள் மற்றும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 14 எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். திமுக, தேசியவாத காங்கிரஸ், டி.எம்.சி., இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

Web Title: Tamil nadu news today live weather politics dmk aiadmk taliban afghan

Best of Express