சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. ஆண்டுக்கு, 11,500 பேர் பி.டி.எஸ், எம்.பி.பி.எஸ் படிப்பை படிக்கிறார்கள்.
10,000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. மக்களுக்கு விரோதமான திட்டங்கள் கொண்டு வந்தால் நாங்கள் அதை எதிர்ப்போம்.
நீட் தேர்விற்கு நாங்கள் எதிரி இல்லை. ஆனால், அது எப்படி நடக்கிறது, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அது ஒரு தனியார் அமைப்பு. தனியார் அமைப்பிடம் நீட் தேர்வை கொடுத்திருக்கிறார்கள். நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மை இல்லாததைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
ரோட்டரியிடம் கொடுத்திருந்தால் கூட தன்னலம் இல்லாமல் அந்த தேர்வை 100% நேர்மையாக நடத்தியிருப்பார்கள். தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை நீட் தேர்வு சீரழித்து விடுகிறது.
பொதுத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அரசு நடத்துவதற்கும், தனியாரிடம் நடத்துங்கள் என சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“