Tamilnadu News Update : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல் அதிருப்தி அளிப்பதாக கூறியும், அவரது பேச்சை கண்டித்தும் திண்டுக்கல்மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் தனது ஆதரவாளர்களுடன் திமுவில் இணைந்துள்ளார்.
தமிழத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுகவின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் இணையும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர்.
மேலும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இப்படி மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கி திமுக கவுரவித்து வருவதால், கட்சியில் இணையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரான வினோத் ராஜசேகரன், இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி, தொகுதி செயலாளர் ஈஸ்வரன், தொழிற்சங்க செயலவாளர் டேவிட் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினோத் ராஜசேகரன், கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பாஜகவின் சங்கியாக செயல்பட்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் கூட பாஜகவை தவறாக பேசக்கூடாது என்று கூறி ஜாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார். கட்சி பொறுப்பு மற்றும் தேர்தலில் போட்டி என அனைத்திற்கும் ஜாதி பார்த்துதான் செயல்பட்டு வருகிறார்.
இவரை நம்பி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மண்மீது வீடுகட்ட விரும்பவில்லை பாறை மீது வீடுகட்ட விரும்புகிறோம். தற்போது சரியாக இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் முன்பே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்து வந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்டத்திலும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்து வருவது திமுகவின் பலரும் அதிகரித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.