தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் கூறினார்.
தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், பொதுத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850/- வழங்க வேண்டும்,
மருத்துவ காப்பீடு நடைமுறையை எளிமைப்படுத்தவும், காப்பீட்டில் காசில்லா மருத்துவம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு நடைமுறையில் இல்லாத ஓய்வு பெற்ற அனைத்து பகுதியினருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்திடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பணிக்கொடை வழங்கும் உச்சவரம்பு ரூ.25 லட்சத்தை அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைப்போல், பொதுத்துறை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநிலத் துணைத்தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல தலைவர் சேகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் சண்முகம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட தலைவர் தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”