கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் : தமிழகத்தின் சட்டப்பேரவை நேற்று கூடியது. தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து நேற்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் நாட்டில் மறைந்த முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் உரையை வாசித்தார் பேரவைத் தலைவர் தனபால்.
Advertisment
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உள்ளிட்டோருக்கு இரங்கல் உரை வாசிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் - முதல்வர் & துணை முதல்வர் புகழாரம்
கலைஞரின் ஓயாத உழைப்பை எண்ணி வியக்கின்றோம் - என ஓ.பன்னீர்செல்வம் கலைஞருக்கு புகழாரம் சூட்டினார். அவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இரங்கல் உரையை வாசித்தார். அப்போது “முதல் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றிய சமூகப்பணி என்றும் மண்ணில் நிலைத்திருக்கும்” என்று கூறினார்.
கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் - கண்ணீர் மல்க நின்ற துரைமுருகன்
மேலும் கலைஞரின் அரசியல் பணியின் ஆரம்பம் தொட்டு, சட்டசபை உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாரின் பணியை விவரித்தார். எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தீர்மானம் வாசித்த பின்பு, தீர்மானத்தின் மீது திமுக துணைத்தலைவர் துரைமுருகன் கண்ணீர் மல்க தன்னுடைய உரையை நிகழ்த்தினார்.
நன்றி (கலைஞர் செய்திகள்)
கனத்த மனதுடன் அனைவரும் இருந்த காரணத்தால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று தன்னுடைய நன்றியை கூறினார் மு.க. ஸ்டாலின். மேலும் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி உரை நிகழ்த்திய தலைவர்கள் அனைவருக்கும் திமுக தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் தலைதாழ்ந்த வணக்கத்தினையும் நன்றியையும் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
வாழ்ந்த நாள்களில் பாதி நாள்களுக்கும்மேல், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நம் தலைவர் கலைஞருக்கு இன்று பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிய நம் தலைவரின் பெருமைகளை உறுப்பினர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. அனைவருக்கும் என் நன்றி! pic.twitter.com/dLsrVLRg2Y