பொதுத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி பா.ஜ.க இன்னும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் வேளையில், தி.மு.க தலைமையிலான தமிழக அரசு முருகப் பெருமானின் பக்கம் திரும்பியுள்ளது. 'தமிழ் கடவுள்' என்றழைக்கப்படும் முருகனுக்கு சர்வதேச அளவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் பக்தர்களை இணைத்து ஜூன் அல்லது ஜூலையில் மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் முருகன் வரலாறு பற்றிய கண்காட்சிகள், ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுதெரிவித்தார்.
இது தொடர்பாக சேகர் பாபு கூறுகையில்,"பழனியில் இதுவரை இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் நடத்தப்படாத ஒரு நிகழ்வை நடத்த உள்ளோம். அதன்படி, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும். உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை அழைத்து 2 நாட்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.