தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கியது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4-ம் தேதியும் தொடங்குகிறது.
இதுகுறித்து மாணவர்கள் தங்களது ஐயங்களைத் தெரிவித்து பயன்பெற வசதியாக முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதே போல், பிளஸ் 1 பொதுத்தேர்வானது மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், பிளஸ் 2- பொதுத் தேர்வை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களில் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில் மட்டும், 410 பள்ளிகளில் இருந்து 160 மையங்களில் 47 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
அதே போல் மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பிளஸ் 1- பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7 ஆயிரத்து 400 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
மேலும், கடந்தாண்டு நடைபெற்ற மார்ச், ஜூன் மேல்நிலை முதலாண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல், தற்போது பிளஸ் 2 பயிலும் 50 ஆயிரத்து 650 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதுகின்றனர்.
மார்ச் 27-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும்புதுச்சேரியில் 12 ஆயிரத்து 687 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 10 ஆயிரத்து 742 பேர் என 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைத்தல் பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள் / பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களைத் தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்
9385494105
9385494115
9385494120
ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.