திமுக முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் இருந்த பாமக பிரமுகர் நேற்று இரவு திருச்சியில் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில், வீடுகளுக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன். இவர் பாமக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அணி முன்னாள் செயலாளராக இருந்தவர். இவருக்கும் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கடையை காலி செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இருதரப்பினரும் உறையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு பிரபு தனது நிறுவனத்தில் தனியாக அமர்ந்திருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது அலுவலகத்தில் புகுந்து பிரபுவை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த கொலை வழக்கில் அவரது நிறுவன வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருச்சி அரியமங்கலம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகிய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும், பாமக பிரமுகர் அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக, திருச்சியில் கொலை செய்யப்பட்ட பிரபு என்கிற பிரபாகரன் மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டு கார்களை வாங்கி விற்பதில் கெட்டிக்காரர். கார் வாங்கி விற்பதில் தான் இந்த கொலை நடந்தாக கூறப்பட்டாலும், ராமஜெயம் கொலை வழக்கில் கொலை குற்றவாளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வெர்ஷா கார் பயன்படுத்தப்பட்டது குறித்த வழக்கில் பிரபாகரனிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை செய்தனர்.
இநத வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு அவர் படுகொலை செய்யப்பட்டார். பிரபாகரன் பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து பல்வேறு குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள பிரபல சொகுசு கார்களை திருடிக் கொண்டு வருவதும், அடிமாட்டு விலைக்கு வாங்கி பிறருக்கு நல்ல விலை வைத்து விற்பதையும் தொழிலாகவும் கொண்டிருந்தார்.
மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு விபத்துகளில் அடையாளம் தெரியாமல் இறந்து போன நபர்களின் பிரேதங்களை எடுத்துக் கொண்டு காவல்துறை ஒத்துழைப்புடன், அந்த பிரேதங்களை தானே அடக்கம் செய்வதாக கூறி அந்த பிரேதத்தை ஆம்புலன்ஸ் வைத்துக்கொண்டு தனது மனைவியுடன் கஞ்சா, பிரவுன் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கடத்தியிருக்கின்றார். அவரது தந்தையையே கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து நேற்று முன்தினம் தான் ஜாமினில் வெளிய வந்தார் என்பதும், ராமஜெயம் வழக்கில் விசாரணை வளையத்திற்குள் இருந்த நபர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.