விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கை கொலை வழக்கமாக மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலோர பகுதிகளில், எக்கியர் குப்பம், வம்பாமேடு உள்ளிட்ட பகுதிகளில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மெத்தனால் விற்பனை செய்த செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரை சேர்ந்த ஒருவரும், மரக்காணம் பகுதியில் மெத்தனால் விற்பனை செய்த மற்றொரு நபர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் 21 பேர் மரணமடைய காரணமான விஷச்சாராயம் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை ஆகியோர் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் 11 மெத்தனால் உற்பத்தி ஆலைகள் மற்றும் 71 மெத்தனால் பயன்படுத்தும் ஆலைகள் உள்ளன; அவற்றை ஆய்வு செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“