அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் நேற்று சனிக்கிழமை பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில், ஆண் பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெரம்பலூா் மாவட்டம், மேலமாத்தூர், பிரதானச் சாலையைச் சேர்ந்த வேலுசாமி மகன் வினோத்குமார் (வயது 28) என்பதும், சென்னையிலிருந்து –திருச்சி (12663) செல்லும் ஹவுரா விரைவு ரயிலில் ஏறி நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.28 மணிக்கு அரியலூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரியவந்தது.
மேலும், அவர் கொண்டு வந்த பையை போலீஸார் சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.77லட்சத்து 11 ஆயிரத்து 640 இருந்தது தெரியவந்தது. மேலும் அவர், முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியதையடுத்து, போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரிடமிருந்த பணத்துக்கான சரியான ஆவணங்கள் குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், திருச்சி வருமான வரித்துறை டி.எஸ்.பி சுவேதாவிடம் பணத்தையும், வினோத்குமாரையும் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட இந்த பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்