scorecardresearch

வட மாநிலத்தவர் குறித்து போலி வீடியோ பரப்பிய பாஜக நிர்வாகி உட்பட 2 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரவி வருகிறது.

வட மாநிலத்தவர் குறித்து போலி வீடியோ பரப்பிய பாஜக நிர்வாகி உட்பட 2 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆன்லைனில் “தவறான மற்றும் ஆதாரமற்ற” தகவல்களை பரப்பியதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் மற்றும் டைனிக் பாஸ்கர் பத்திரிகையின் பெயர் குறிப்பிடாத இரண்டு பத்திரிகையாளர்கள்  மீது தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த தகவல்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பீகார் பாஜக. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த அனைத்து கட்சி குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது பீகார் அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பியதாக எழுந்த புகாரின்பேரில், கோவா உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், டைனிக் பாஸ்கர் ஆசிரியர் மற்றும் பீகாரைச் சேர்ந்த முகமது தன்வீர் என்ற சிறு-நேர பத்திரிகையாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், மக்களும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை எங்களது சகோதரர்களை பாதுகாப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழ்நாடு எப்பொழுதும் அனைவரையும் வரவேற்கும் விருந்தோம்பலின் பூமியாக இருந்து வருகிறது… தமிழகத்தில் நிலவும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒரு சிலர் தமிழக அரசையும் அதன் மக்களையும் மோசமான வெளிச்சத்தில் காட்ட முயற்சிக்கின்றனர். அவர்களின் எண்ணம் பலிக்காது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடமும் இது குறித்து பேசியுள்ளேன். தொழிலாளர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காது என்று தனது அரசாங்கம் சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று கூறியதாக தமிழக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை மறுத்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, “அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துதான் இதைச் சொல்கிறேன். பீகார் பா.ஜ.க தலைவர் இன்று என்னை அழைத்து பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்தார். நான் அவரிடம் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இல்லை என்று சொன்னேன், இதைப் பற்றி அவரிடம் சொன்னது யார் என்று கேட்டேன்.

தமிழ்நாடு காவல்துறையும், அரசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அளித்து வருகிறது என்று அவரிடம் கூறினேன். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், இதுபோன்ற அறிக்கைகள் தமிழ் மக்களை இழிவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நான் கூறுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வட இந்திய தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான “போலி” செய்திகளின் “அரசியல் நோக்கங்கள்” மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் தொடர்புபடுத்த இவ்வாறு செய்துள்ளதாக தமிழக காவல்துறை கூறுகிறது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உட்பட பல எதிர்க்கட்சி பிரபலங்கள் முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அங்கு பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவரின் கருத்துக்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போனது. ட்விட்டரில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட உம்ராவ், பேரணிக்கு மறுநாள் 12 பீகார் தொழிலாளர்கள் இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக என்று ட்வீட் செய்ததாகக் கூறப்படுகிறது, மேலும் தேஜஸ்வி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்துடன் அதை வெளியிட்டார். அதே நாளில் பத்திரிகையாளர்களும் வதந்திகளை பரப்பியதாக காவல்துறை கூறுகிறது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

திமுக பேரணி நடந்த ஒரு நாள் கழித்துதான் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இது தொடர்பான செய்தி முதலில் டைனிக் பாஸ்கர் இணையதளத்தில் வெளியானதாக தெரிகிறது. இது அவர்களின் அச்சு பதிப்பில் வெளியிடப்படவில்லை, ஆனால் தன்வீர் வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்த பொய்யான கதைகளுடன் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டார்.

அதில் ஹிந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் 12 பேர் கொல்லப்பட்டதாக போலி செய்திகளும் அடங்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப வாட்ஸ்அப் குரூப்களில் இந்த செய்தி பரவியதால் பீதி ஏற்பட்டது. வடமாநிலங்களில் உள்ள பல ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் இந்த கதையை ஒளிபரப்பத் தொடங்கின, மேலும் பீகார் பாஜக பிரிவு ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தேஜஸ்வி பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதை எடுத்தது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு டஜன் முக்கிய மற்றும் சரிபார்க்கப்பட்ட பாஜக பிரமுகர்கள்ன சமூகவலைதள பக்கத்தில் திமுக பேரணி நடைபெற்றதிலிருந்து இந்த வழிகளில் வெவ்வேறு போலி அறிக்கைகளை தீவிரமாக பரப்பி வருகின்றன.

இது குறித்த கேள்விக்கு பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின்ஜியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தேஜஸ்வி சார்ட்டர்ட் விமானம் மூலம் சென்னை சென்றார். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கேக் சாப்பிட்டுவிட்டு, தமிழகத்துக்கு ஆதரவாகவும், பீகார், பீகாரிகளுக்கு எதிராகவும் ஏன் பேச ஆரம்பித்தார்?

பாஜகவைச் சேர்ந்தவர்கள் உட்பட பல தலைவர்களின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆனந்த் கூறினார்: “காவல்துறையினர் நடத்தப்பட்ட தாக்குதல்களை முழுவதுமாக மறுக்க முயற்சிப்பதை விட நியாயமான விசாரணையை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.” தமிழக பாஜக தலைவர் ஒருவர், உம்ராவ் தனது ட்வீட்டை நீக்கிவிட்டதாகக் கூறினார்:

இந்நிலையில், பீகாரில் இருந்து வந்த குழுவினர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சென்னையில் உள்ள அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு உண்மை நிலை குறித்து தெரிவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். புலனாய்வு அறிக்கைகள் வதந்திகளின் நோக்கம் ஒரு வெளியேற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், ஹோலிக்கு தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வழக்கமான பயணத்தைத் தவிர, வேறு எந்த சூழ்நிலைக்கான அறிகுறியும் இல்லை, ”என்று அந்த அதிகாரி கூறினார்.

தமிழகத்தில் பீகார் மற்றும் ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு இடையேயான சண்டை தொடர்பாக ஒரு வீடியோ பரப்பப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைக் காட்டுவதாகக் கூறும் மற்ற வீடியோக்கள் கும்பல் சண்டைகள் என்று ஆதாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற வீடியோக்கள் “போலி” என்று தமிழ்நாடு டிஜிபி சி சைலேந்திர பாபு கூறினார்.

மேலும் போலி செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் காவல்துறை உதவி எண்களைப் அழைக்கலாம் என்று தொடர்பு எண்களை அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu police filed case against bjp leader and 2 journalists