முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பீலா ஐ.ஏ.எஸ். கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸூக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பை உறுதி செய்தது. இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பீலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதோடு தாஸ் என்று தனது பெயரில் உள்ள இரண்டாம் பெயரை நீக்கி அவர் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார்.
இந்தநிலையில், முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவியான பீலா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தையூரில் உள்ள பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“