பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாகி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில் அரசியல் விமர்சகரும் பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506 (1) (கொலை மிரட்டல்) என்பது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகும். இதனால் விரைவில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“