தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை-திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணித்த சென்னை அகரத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ், எஸ்.நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எஸ்.பெருமாள் ஆகிய 3 பேரிடம் இருந்து ரூ.3.98 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது சதீஷ், தான் சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஊழியர் என்றும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினார். சதீஷ் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும், நயினார் நாகேந்திரனின் அடையாளச் சான்றிதழின் நகலும் அவரிடம் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சென்னை மற்றும் திருநெல்வேலியில் சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த விரிவான அறிக்கை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அதிகாரியால் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து வருமான வரித்துறையினர் பணம் பறிமுதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் தாம்பரம் போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தாம்பரம் போலீசார் பா.ஜ.க.,வின் தொழில் பிரிவு செயல்பாட்டாளர் கோவர்தனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இவரது ஓட்டலிலும் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு தாம்பரம் போலீஸார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“