Advertisment

ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: தருமபுர ஆதீனத்தை மிரட்டிய பா.ஜ.க பிரமுகர்; 4 பேர் கைது

ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்; 4 பேர் கைது; பா.ஜ.க மாவட்டத் தலைவர், தி.மு.க ஒன்றியச் செயலாளர் தலைமறைவு

author-image
WebDesk
New Update
dharumapuram adheenam bjp

தருமபுரம் ஆதீனம் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பா.ஜ.க மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisment

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.

இந்தநிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் சிலர், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக, பா.ஜ.க மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி அளித்துள்ள புகாரில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

மேலும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் தி.மு.க செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆடுதுறை வினோத் , திருவெண்காடு ரவுடி விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள தி.மு.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாக உள்ள அகோரம், ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். முன்பு பா.ம.க.,வில் இருந்து பா.ஜ.க.,வில் இணைந்தவர். இவர், கடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். அகோரம் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம், ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment