பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், மொபைல் போன், வெப் கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
இந்தநிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கைப்பற்ற பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், ஐந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“