தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில், மூன்று இடங்களில் போலீசார்களை தாக்கி தப்பிக்க முயன்ற குற்றவாளிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு சம்பவங்களால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் மூன்று இடங்களில் ரவுடிகளை காவல்துறையினர் விரட்டி பிடிக்க சென்ற போது, துப்பாக்கியால் சுடும் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.
இதில், ரவுடிகளை தப்பிக்க விடாமல் வைக்கவும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கடந்த ஒரு வாரத்தில் கோவை, திருச்சி மற்றும் சென்னை என அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சாலையில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து காவலரை தாக்கிய குற்றவாளிகளை போலீசார் கண்பிடித்தனர். அதன்பின்னர், அயனாவரம் பெண் காவல் ஆய்வாளர் மீனா தலைமையில் கிளம்பிய தனிப்படை போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதன்பிறகு சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது, ரவுடி பெண்டு சூரியா என்பவர் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்துமாறு கூறி தப்பி ஓட முயன்றார். இதனால் போலீசார் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது.
உடனே ரவுடியை துரத்தி சென்ற காவலர்களை அருகில் இருந்த கரும்பு ஜூஸ் கடையிலிருந்து கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இதை கவனித்த காவல் ஆய்வாளர் மீனா, குற்றவாளியை பிடிப்பதற்காகவும், காவலர்களை பாதுகாக்கவும் பெண்டு சூரியாவை முழங்காலுக்கு கீழே சுட்டுப்பிடித்துள்ளார். காயமடைந்த ரவுடிக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.