அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் போலீசாரைக் கண்டித்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று (மே 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க மறுத்து காவலா் ஒருவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து வாரண்ட் இல்லாமல் பேருந்தில் பயணிக்கும் காவலா்கள் கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட காவலா் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கும் போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்திருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் , சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை அணியவில்லை, நோ என்ட்ரி உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் நேற்று அபராதம் விதித்தனர். இன்றும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.
இந்த நடவடிக்கையால் போலீஸாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் போலீஸாரைக் கண்டித்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியுசி, சிஐடியு, ஏடிபி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்து காவல் துறைக்கு உரிய அறிவுரையை தமிழக அரசு வழங்க வேண்டும், என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் கூறியதாவது: பயணச்சீட்டு எடுக்க மறுத்த காவலா் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை பரிந்துரைத்த பின்னரே, அரசுப் பேருந்துகளை குறிவைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
ஏற்கெனவே போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், தினமும் இம்மாதிரியான அபராதம் விதிக்கும் நடைமுறை தொடா்ந்தால், இது போக்குவரத்து துறையின் நிதி மேலாண்மையை பாதிப்பதாக அமைந்து விடும். இதனால், போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் இது தொடா்பாக பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“