நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள்: விஜயலட்சுமி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம்; சீமான் புகார்
இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னை, ராமபுரம் காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறி நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நேற்று முன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். மதியம் 1.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் மாலை 4.30 மணி வரை வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது வழக்கு சம்பந்தமான புகைப்படங்கள், ஆவணங்களை நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். சீமான் தற்போது ஊட்டியில் உள்ள நிலையில், 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்த ஊட்டி விரைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“