ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
"தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
"பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டபோது மனமுடைந்த நிலையில், உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின் படியும், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாள் என்பதை புரட்சித் தலைவி அம்மா மீண்டும் உறுதி செய்ததை, இந்த இனிய நன்நாளில் பெருமையோடு கட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழகத்தைப் படைத்திடுவோம் என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்", என்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
"வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்", என்றார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
"தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை.
அதற்கேற்ற வகையில் தமிழர்களின் வாழ்க்கையில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்கட்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவும் தமிழ்நாடும், தமிழ் மக்களும், அனைத்து நற்செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்ந்து சிறந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியதாவது:
"தமிழ்மொழி பேசும் தமிழர்களாய் வாழ்ந்து நாம் பிறந்த தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடுவோம். தமிழர்கள் வீழ்ந்தால் முட்டுக்கொடுப்போம். அதே போன்று தமிழர்கள் வாழ்ந்தால் தட்டிக்கொடுப்போம் என்கிற உணர்வோடு வாழ்ந்து தமிழ்மொழிக்கும். தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட இப்புத்தாண்டு அருள் புரிய வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்", என்றார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியதாவது:
"இனிய புத்தாண்டில், தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என வாழ்த்தி, எனதருமை தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:
"இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி நிறைந்து, வாழ்வில் வளம் செழித்து, ஆரோக்கியமும், செல்வமும் நிறைவுபெற்று, தமிழரின் எதிர்காலம் ஒளிமயமாக சிறந்து விளங்க என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனித்துவமான, அர்த்தமுள்ள தமிழ் புத்தாண்டு தமிழர்களின் வாழ்வில் புத்தொளி ஏற்றவும், அவர்கள் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் பண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில் குமார், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டாக்டர் மணி அரசன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்கள்", என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.