சட்டவிரோத மதுபார்களை மூடிய குற்றத்துக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டதாக கூறப்படும் டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத மதுபார்கள் செயல்பட அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் துணையாக இருப்பதாக ஓப்பனாக கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு ஆதரவாக கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினர் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதாகக் கூறி, அவரது வீட்டில் இருந்து டி.எஸ்.பி அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் தேதி நடந்தே சென்றார். அந்த வீடியோ ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, டி.எஸ்.பி.,க்கு மீண்டும் வாகனம் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு வாகனம் மறுத்தது குறித்து டி.எஸ்.பி சுந்தரேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவல்துறை உயரதிகாரிகள் 3 பேர் மீது குற்றம் சாட்டினார். சட்டவிரோத மதுபார்களை மூடியதற்காக தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தனக்கு விடுமுறை தர அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் கூறி, டி.எஸ்.பி சுந்தரேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அவரை காவல்துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர். இதன் காரணமாக அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சுந்தரேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சுந்தரேசன் சீல் வைத்த பல பார்கள், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதும், மீண்டும் செயல்படும் வீடியோக்களும் வெளியாகின. இது சமூக வலைதளங்களில் வைரலானது, மேலும் டி.எஸ்.பி சுந்தரசேனுக்கு ஆதரவாக கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.
இந்த நிலையில், மயிலாடுதுறையில் சுந்தரரேசனுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்டவர்கள், அரசியல் வேறுபாடின்றி களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் இநத் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சி நிர்வாகிககள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர், பா.ம.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் எஸ்.பி, இன்ஸ்பெக்டர் பாலச்சந்தரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்பாட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்