Advertisment

மன்மோகன் சிங் மரணம்: ஸ்டாலின், இ.பி.எஸ், விஜய் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தருணத்தில் பலரும் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.

author-image
WebDesk
New Update
TN leaders

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும், தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.

நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

Advertisment
Advertisement

பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் மன்மோகன் சிங்கை நினைவு கூறும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகள் இந்தியாவிற்கு புதிய பாதையை ஏற்படுத்தியதாக" அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது இரங்கல் அறிக்கையில், "மன்மோகன் சிங் குறைவாக பேசி, பல சாதனைகளை செய்தார் என்றும், இந்திய பொருளாதாரத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் மன்மோகன் சிங் குறித்து நினைவுகூர்ந்துள்ளார். குறிப்பாக, மன்மோகன் சிங்கின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களின் நலனுக்காக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங்கின் இழப்பு ஜனநாயகத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். "உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநரும் மேனாள் இந்திய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு மிகுந்த  வேதனையளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

திரு. மன்மோகன் சிங் அவர்கள் இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதிலும்;  இந்தியாவைபொருளாதாரத்தில் வலிமைபெறச் செய்வதிலும் மிக கவனமாகவும் உறுதியாகவும் இருந்தார். குறிப்பாக, இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதற்கு ஏதுவாக தாராளமய பொருளாதார நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். 

திரு. நரசிம்மராவ் அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் இந்தியாவில் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகுந்த நெருக்கடியில் இருந்த இந்தியப் பொருளாதாரம் அதனால்தான் மீட்கப்பட்டது எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆற்றல் பெற்ற அவருடைய மறைவு இந்திய தேசத்துக்கு, குறிப்பாக , இந்திய சனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற போது, எவரும் எதிர்பாராத வகையில் திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமர் ஆக்கப்பட்டார். இந்தியாவில் சீக்கிய- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனது அதுவே முதல் முறையாகும். 

2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பேற்று அவர் நடத்திய ஆட்சியே அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பானதாக இருந்தது.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயர் வருமான வரம்பை 4.5 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக உயர்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினோம். அதன் பின்னர்தான் அந்த வருமான வரம்பு ரூ.4.5 இலட்சத்திலிருந்து  ரூ. 6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டது.

அவரது முதலாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் அவர் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தால் அவரது அரசுக்கு ஆதரவு அளித்துவந்த இடது சாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர். ஆனாலும் அதற்குப் பிறகு 2009 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறையும் அவர் பிரதமரானார்.  உணவுப் பாதுகாப்புச் சட்டம்; 
கல்வி உரிமைச் சட்டம்; மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம்; 
தகவலறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்களுக்கு உதவக்கூடிய பல சட்டங்கள் அவரது ஆட்சியின்போது தான் இயற்றப்பட்டன. அவற்றால் கோடிக் கணக்கான மக்கள் இப்போதும் பயனடைந்து வருகின்றனர். 

இந்தியாவின் பிரதமராக இருந்ததோடு இந் நாட்டின் பெருமைமிகுக் குடிமகனாகவும் அவர் போற்றப்பட்டார். பொது வாழ்வில் கண்ணியத்தையும், களங்கப்படுத்த முடியாத நேர்மையையும் கொண்டு, அனைத்துத் தரப்பினரது 
நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார்.

அவரது மறைவுக்கு விசிக சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என வி.சி.க சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

மன்மோகன் சிங் மறைவால் தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். மக்கள் பணிக்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Former Pm Manmohan Singh Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment