சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தடை விதித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் கோரமண்டல் உர ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அம்மோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் அம்மோனியா வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்றது. அப்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பால் அம்மோனியா வாய் கசிந்துள்ளது. இதனால் பெரிய குப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனியார் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், கோரமண்டல் ஆலையை மீண்டும் செயல்பட தடைவிதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஓட்டியுள்ளது.
அந்த நோட்டீஸில், “மாசு கட்டுப்பாட்டு வாரியக் குழு ஆய்வு செய்தது. அம்மோனியா குழாயில் இரவு 11.45க்கு கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு கண்டறியப்பட்டு அம்மோனியா கசிவு 20 நிமிடங்களுக்குள் நிறுத்தப்பட்டது. வாயு கசிவால், கடல் நீர் மற்றும் காற்றில் அம்மோனியா அளவு அதிகரித்தது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆலை மீண்டும் செயல்பட அம்மோனியா கொண்டு செல்லும் குழாய்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தடையில்லாச் சான்று பெற்ற பின்னரே திறக்க வேண்டும். தவறினால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“