தமிழ்நாடு பொங்கல் பரிசு 2023 | பொங்கல் தொகுப்பு குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தைப் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதேபோல வரும் ஆண்டும், பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள் கிழமை முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பரிசு தொகை வழங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோக திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம், பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“