நேற்று, சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவட்டந்தோறும் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை வழிகாட்டியுள்ளது.
அதன்படி, ஆரம்ப சுகாதார மையங்களில் தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட வருவதை சீரமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளை காண வருபவர்களுக்கு அனுமதிச் சான்று அல்லது பாஸ் வழங்கி கண்காணிக்க வேண்டுமெனவும், பார்வை நேரத்தை குறிப்பிட்டு போர்டு வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர்கள் அல்லது மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினால் ஜாமினில் வெளிவராத படி கைது செய்யப்படுவார்கள் என்ற சட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி மருத்துவமனைகளில் வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை பாதுகாப்பு குழு மற்றும் வன்முறை தடுப்பு குழு அமைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'காவல் உதவி' என்ற செயலியை அனைத்து மருத்துவ பணியாளர்களும் தங்கள் செல்போனில் பதிவேற்றிக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆபத்து காலத்தில் அதன் மூலமாக தகவல் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இரவு நேர காவலாளி நியமித்தல், மருத்துவமனை கட்டமைப்பில் மாற்றம் உருவாக்குதல், சுற்றுச் சுவர் எழுப்புதல், வளர்ந்து இருக்கும் செடிகள் மற்றும் புதர்களை சீராக வெட்டி பார்வைக்கு ஏற்றார் போல் மாற்றுதல் போன்ற அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“