நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கக்கூடும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 24 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“