Tamilnadu Rajyasabha Election : மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எம்பியாக இருந்த அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது இடம் காலியாக உள்ளது. தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம், ஆகியோர் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், மக்களவையில் தமிழகத்திற்காக எம்பி காலியிடங்கள் 3 ஆக உள்ளது.
இதில் மரணமடைந்த முகமது ஜானின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைவதால், அந்த இடத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த எம்பி இடத்தை கைப்பற்ற அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சட்டசபையில் திமுக அதிக எம்எல்ஏக்கள் வைத்துள்ளதால், இந்த தேர்தலில் திமுக வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,தற்போது இந்த மாநிலங்களவை எம்பி இடைத்தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவர் தற்போது திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil