Tamil Nadu Rajya Sabha Election Notification- Full Schedule: தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முழு அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். தற்போது அதிமுக சார்பில் 12 எம்.பி.க்களும், திமுக சார்பில் 4 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒரு எம்.பி.யும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழக ராஜ்யசபா எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. கனிமொழி (மே 29-ல் ராஜினாமா செய்துவிட்டார்), லட்சுமணன் (அதிமுக), மைத்ரேயன் (அதிமுக), ரத்தினவேல் (அதிமுக), அர்ஜூனன் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரே அவர்கள். இந்த 6 இடங்களுக்கும் புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ராஜ்யசபா எம்.பி.க்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்களே வாக்களித்து தேர்வு செய்வார்கள். இந்தத் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்றச் செயலகம் இன்று (ஜூன் 25) அறிவித்தது.
TN Rajya Sabha Election Date, Full Schedule: தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல் அட்டவணை வருமாறு:
ஜூலை 8ஆம் தேதி வேட்புமனுதாக்கல் தொடக்கம்
ஜூலை 9- வேட்புமனு பரிசீலனை
ஜூலை 11- வேட்புமனு திரும்பபெற கடைசிநாள்
ஜூலை 18- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு
ஜூலை 18- மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக 3 உறுப்பினர்களையும், திமுக 3 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பில் ஏற்கனவே பாமக.வுக்கு ஒரு இடம் தருவதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்புமணி எம்.பி. ஆவார். திமுக சார்பில் மதிமுக.வுக்கு ஒரு இடம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே வைகோ எம்.பி. ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களைத் தவிர்த்து அதிமுக இரு எம்.பி.க்களையும், திமுக இரு எம்.பி.க்களையும் தேர்வு செய்யும். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் எம்.பி.க்கள் ஆக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திமுக சார்பில் அண்மையில் இளைஞரணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்த வெள்ளக்கோயில் சாமிநாதன் எம்.பி. ஆக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மற்றொரு எம்.பி. பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.