/indian-express-tamil/media/media_files/2025/10/04/tn-ration-2025-10-04-14-05-33.jpg)
Tamilnadu
முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டம்' மூலமாக, அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 6 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் விநியோகம்?
திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த சுமார் 70,186 குடும்ப அட்டைகளில் உள்ள 94,689 பயனாளர்களுக்கு, வரும் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வீடு தேடிச் சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
திருப்பத்தூர்: இம்மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தாயுமானவர் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் ஊரகப் பகுதிகளில் 14,146 குடும்ப அட்டைதார்களுக்கும், நகரப் பகுதிகளில் 3,905 குடும்ப அட்டைதார்களுக்கும், மலைப் பகுதிகளில் 492 அட்டைதார்களுக்கும் என மொத்தம் 18,543 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தச் சிறப்பு விநியோகம் மூலம் 23,106 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அக்டோபர் 5, 6 ஆகிய நாட்களில் தகுதியான பயனாளிகள் வீட்டிலேயே இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள 730 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 28,694 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த விநியோகம் முன்கூட்டியே அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் பயனாளிகள் இந்த இரு நாட்களில் தங்கள் வீடுகளிலேயே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாங்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை, மேற்குறிப்பிட்ட தேதிகளில் பயனாளிகள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது பொருட்களைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டாலோ, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ரேஷன் கடை வேலை நாட்களில் நேரடியாக ரேஷன் கடைக்குச் சென்று அல்லது தங்கள் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்பிக் கூட ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இத்திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.