Advertisment

'மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயரவில்லை': விளக்கம் கொடுத்த பத்திரப் பதிவுத் துறை

மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லை என பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் பலரும் கூறியதாக பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Registration DPT on Guideline value increase Tamil News

பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று ஏகமனதாக கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு எந்த வித முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவை தவறான செய்தி என பத்திரப் பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

இது தொடர்பான பத்திரப்பதிவுதுறை அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவேதான் 01.04.2023 முதல் ஏற்கனவே, அதாவது 08.06.2017 அன்று இருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது.

மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லையென 27.07.2023 அன்று நடைபெற்ற பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்தனர். எனவே, மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று ஏகமனதாக கோரிக்கை வைத்தனர்.

மேலும் விளைநில மதிப்பும் சில இடங்களில் மிக மிக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47(AA)-ன் படி பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க மைய மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆணையர்(நகர ஊரமைப்பு இயக்கம்), முதன்மை பொறியாளர்(கட்டடம்) பொதுப்பணித்துறை, இணை ஆணையர்(நில நிர்வாகம்), ஆணையர்(நகராட்சி நிர்வாகம்), இயக்குநர்(பேரூராட்சி), இயக்குநர், (ஊரக வளர்ச்சி), ஆணையர் (நில அளவை மற்றும் பதிவேடுகள்), பிரதிநிதி-(சென்னை மாநகர வளர்ச்சி குழுமம்), துணை ஆணையர் (சென்னை மாநகராட்சி), பிரதிநிதி-(வருமானவரித்துறை), முதன்மை பொறியாளர்(நீர்பாசனம்) பொதுப்பணித்துறை, கூடுதல் பதிவுத்துறை தலைவர்(வழிகாட்டி), பிரதிநிதி-(மதிப்பீட்டாளர் சங்கம்), பிரதிநிதி-(தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மைய மதிப்பீட்டுக்குழு 16.08.2023 அன்று கூடி இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக கொண்டுள்ள தெரு/சர்வே எண்களுக்கு மட்டுமே இம்மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது. அனைத்து தெரு/சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை.

எனவே, ஒரு சில ஊடகங்களில் முன்னறிவிப்பின்றி வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று வந்துள்ள செய்தி தவறான செய்தி ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது http://tnreginet.gov.in என்ற பதிவுத்துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக மேலேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Registration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment