புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உடனடியாக வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து அங்கு நீண்ட காலமாக சாதியப் பாகுபாடு நடைபெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.சி,எஸ்.டி ஆணையமும் இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சி.பி.சி.ஐ.டி போலீசாரின் வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் ஆணையம் கோரியுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையை எவ்வித தாமதம் இன்றியும் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையில் மலம் கலக்கப்பட்ட தொட்டி சுத்தம் செய்யப்பட்டு
தண்ணீர் வரும் குழாய்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தொட்டியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பதிலுக்கு புதிய குழாய்கள் மூலம் 1,000 லிட்டர் மினி பவர் பம்ப் தொட்டியில் இருந்து தலித்துகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் அறிக்கையின்படி, தலித் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த பழைய தெட்டியை இடித்து விட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வேங்கைவயலில் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. ஒன்று தலித்துகளுக்கும் மற்றொன்று மற்ற சமூகத்தினருக்கும் வழங்கப்படுகிறது. இது தான் இச்சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது என ஆணையம் தெரிவித்தது. மேலும், கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய பெரிய மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தது.
மாசடைந்த குடிநீர் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 8.25 லட்சம் வழங்க கோரி ஆதி திராவிட நலத்துறை ஆணையருக்கு மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 67 தலித்துகளுக்கு பட்டியலின, பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கவும் உத்தவிரப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 13-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/