/indian-express-tamil/media/media_files/2025/06/26/kovai-sc-st-commissioner-2025-06-26-19-16-19.jpeg)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் சரவணசுந்தர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அரசு திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா? எந்த அளவுக்கு செயல்பாட்டில் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பொது மக்கள், அமைப்பினர் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். முன்னதாக நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணையத் தலைவர், இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இன்னும் சில விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது, அதனை அறிவுறுத்தியுள்ளோம். நேற்று இரவு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தோம். அப்போது அங்கு வசதிகள் இல்லை என தெரியவந்தது. அதனை உடனடியாக சீர் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
குடியிருப்புகளில் தரையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதில் பல இடங்களில் சிரமம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியரிடம் தெரிவித்தப்பட்டுள்ளது. 2,000 மக்கள் வீடுகள், பட்டா நிலம் கேட்டுள்ளனர், அதனை ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.
தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளது. அவை தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் நிலங்களுக்கு உடனடியாக பட்டா ஒப்படைக்க வேண்டும். மேலும், அதில் சில குளறுபடிகள் ஏற்படுகிறது. ஆட்சியர் இதற்கான நில வரையறை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை சுகாதார பணியாளர்களுக்கான ஊதியப் பிரச்சனை தொடர்பாக ஆணையம் தீர்வு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு ஆணைய தலைவர் தமிழ்வாணன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.