Tamil nadu schools colleges cinema theatres reopening date : தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு, சில தளர்வுகளுடன் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி வரும் 16ம் தேதி முதல் செயல்படும். மேலும், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்படும்.
தற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் வரும் 2ஆம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபார கடைகள் 3 கட்டங்களாக வரும் 16ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்கு உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 % இருக்கைகளுடன் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
சின்னத்திரை படப்பிடிப்பில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒரே சமயத்தில் 150 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை சார்ந்த கூட்டங்களில் 100 பேர் வரை 16 ஆம் தேதி முதல் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமண நிகழ்வுக்கு 100 நபர் வரை, இறுதி ஊர்வலங்களில் 100 நபர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நாளை முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.