Tamil Nadu seeks time to evict marshland squatters: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 500க்கும் மேற்பட்ட பெத்தேல் நகர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அடுத்த நாள், பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ரவீந்திரன், ”மின் இணைப்பு துண்டிக்கப்படும் வீடுகளில் குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள் பெரும்பாலானோர் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் கல்வி கற்று வருகின்றனர். இப்படி இருக்கின்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வி ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பதால் அதன் பின்னர் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்க முடியாது. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை காரணமாக தெரிவிக்க இயலாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி ஐ.எச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.
கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், கூறிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (28/01/2022) ஒத்திவைத்தனர். வீடு மற்றும் வணிக நோக்கங்களுக்காக ஆக்கிரமித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. அப்போது அரசு தரப்பில், கடந்த வார உத்தரவுக்கு பிறகு, 1052 வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 1007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டது.
பெத்தேல் நகர் பொதுமக்கள் தரப்பில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்ற காரணத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், அரசு தரப்பு கூடுதல் மனுவையும் திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.