அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை வழங்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊரிற்கு பயணிப்பது போன்று ஐந்து முறைக்கு மேல் SETC பேருந்து சேவையை பயன்படுத்தினால், ஆறாவது பயணத்திற்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.505 கட்டணம் செலுத்தி பயணித்தால், அவர்களது ஐந்தாவது பயணத்தில் ரூ.252 செலுத்தி பயணிக்கலாம்.
தமிழக அரசு விரைவு பேருந்து சேவை பெற, மற்றும் இதர சேவைகளை பற்றி தெரிந்துகொள்ள, இந்த இணைப்பை https://www.tnstc.in/home.html பயன்படுத்தலாம்.
இது போன்ற வசதி மாணவர்களுக்கு, வணிக ரீதியாக பயணம் செய்பவர்களுக்கு, மற்றும் நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர், SETC பேருந்துகளில் தனியாகப் பயணம் செய்யத் தயங்கும் பெண் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெண் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து SETC பேருந்துகளிலும் அவர்களுக்கு நான்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை பெண்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அரசு பேருந்து நிலையங்களில் கேன்டீன்களை நடத்துவதில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். டிப்போக்களில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளையும் போக்குவரத்து துறை அமைக்கும்.
பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்கு உதவும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க போக்குவரத்துத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ், 3.55 கோடி செலவில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் 10.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பஸ் டிப்போ மற்றும் நிலையத்திற்கு, கான்கிரீட் தளம், பயணிகள் இளைப்பாற இடமும், உயர் கோபுர விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சுமார் 315 பஸ் டிப்போக்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார். 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த முயற்சிக்காக துறை ரூ.18.90 லட்சம் ஒதுக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.