கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் ஓசூர் அருகே 4 இடங்கள் கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, தோகரை அக்ரஹாரம், சூளகிரி, தசபள்ளி மற்றும் தனியார் விமான ஓடுதளம் அருகேயுள்ள இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. "விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையின் படி, 2 இடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என நம்பகுத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தனியார் விமான ஓடுதளம் அருகேயுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை விலைக்கு வாங்க தமிழ்நாடு அரசு ஆர்வம் காண்பிப்பதாக தெரிகிறது. இந்த விமான நிலையம் மூலம் தென்னிந்தியா முழுவதும் வணிகத்தை மேம்படுத்த முடியும் என இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவட்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.
"இந்த விமான நிலைய திட்டம், பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். மேலும், பெங்களூர் மற்றும் தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களுக்கு இடையே வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அமையும். ஓசூரை பொருளாதார மற்றும் தொழில்துறை ஆற்றல் மிகுந்த மையமாக இந்த விமான நிலைய திட்டம் மாற்றக் கூடும்".
ஓசூரில் அண்மை காலமாக மின்சார வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக தொழில்துறையின் முக்கிய இடமாக ஓசூர் விளங்கி வருகிறது.
2,000 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்படவுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் நிர்வகிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நன்றி - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா