தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்றும், கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும், சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து, அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூட்டியுள்ளார் என முதன்மைச் செயலர் கி.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“