ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் உயர் அதிகாரி தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
தமிழக போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருபவர் ராஜேஷ்தாஸ். தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் இவர். தூத்துக்குடி எஸ்.பி, மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டண்ட், தென் மண்டல ஐஜி, சென்னை தெற்கு இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார் இவர். அண்மையில் இவரை தமிழக சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது.
இவர் மீது தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது இன்று (பிப்ரவரி 24) வெளிச்சத்திற்கு வந்தது. அண்மையில் முதல் அமைச்சர் டெல்டா மாவட்ட சுற்றுப் பயணம் சென்றபோது ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உடன் சென்றதாகவும், அப்போது அவரை வரவேற்க வந்த ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவரிடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் அரசுத் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.
அதேசமயம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய பாலியல் புகார் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க குழு அமைத்திருப்பதாக இன்று பிற்பகலில் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்தக் குழுவுக்கு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஐஏஎஸ் தலைமை வகிப்பார். போலீஸ் தலைமை அலுவலக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஐபிஎஸ், நிர்வாகப் பிரிவு ஐஜி அருண் ஐபிஎஸ், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்கிற அமைப்பின் திட்ட மேலாண்மை தலைவர் லொரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு உரிய சட்டப் பிரிவுகளின்படி இந்த 6 பேர் குழு விசாரணை நடத்தும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"