Oxygen demand doubles : தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 3வது வாரம் வரை தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவை 250 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தற்போது அதன் தேவை 400 முதல் 450 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சில மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் பெட் தேடி வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி அவல நிலை ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 80 வயது நோயாளியை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கேட்டு கொள்ளப்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் தலையீட்டால் மீண்டும் அவர் அங்கேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டதாகவும் அவரின் உறவினர் ஒருவர் கூறினார்.
நிறைய நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லாததால் நாங்கள் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரிக்கவில்லை ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துவிட்டது என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறினார்.
தமிழக அட்வகேட் ஜெனரல் உயர்நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழகம் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் பயன்பாடு 250 மெட்ரிக் டன் மட்டுமே என்று கூறினார். ஒரு மூத்த சுகாதார அதிகாரியின் கூற்றுப்படி, நோயாளியின் தேவைகள் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் தற்போதைய தினசரி ஆக்ஸிஜன் நுகர்வு 400 முதல் 450 மெட்ரிக் டன்களுக்கு இடையில் உள்ளது, அதே நேரத்தில் கிடைப்பது 400 மெட்ரிக் டன்களாக உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைக்கான காத்திருப்பு நேரம் இப்போது ஆறு மணி நேரத்திற்கு அப்பால் உள்ளது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையைக் கூறி ராஜீவ்காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளை நோக்கி அனுப்பி வைக்கின்றனர் என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
மத்திய அரசு திருத்தப்பட்ட ஆக்ஸிஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்காக மாநில அரசு காத்துக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு அருகே உள்ள ஆலைகளில் இருந்து பெறப்படும் ஆக்ஸிஜன் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil