Tamil Nadu Tamil News: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், அல்லது நடை பயணமாக, அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அந்த அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர்கள் சைக்கிளிலும், நடை பயணமாகவும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தியும் அலுவலகம் சென்று சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் திங்கள்கிழமை பொதுப்போக்குவரத்து மூலம் அலுவலம் சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, தொடர்ந்து இரண்டாவது வாரமாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் சென்றுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். மேலும், அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார்.
அரசுப் பேருந்தில் இந்த வாரமும் நின்று கொண்டே பயணம் செய்த அவர், கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார். அவருடன் ஆண் அதிகாரிகளும் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர்.

வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருமாறும் மாவட்ட கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“