தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பை மேலும் குறைக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் 14-தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 21-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருந்து டாஸ்மாக் கடைகளை திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 14-ந் தேதி முதல் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்றின்முதல் அலையில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்போதே அப்போதைய அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து தொற்றே இல்லை என்ற நிலையில் தான் வருவாய்த்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. கொரோனா தொற்று முதல் அலையின்போது அரசு எடுத்த நடவடிக்கைக்கும் 2-வது அலையின்போது அரசு எடுத்த நடவடிக்கைக்கும் இடையே உள்ள பாகுபாடு என்ன என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போதைய நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மூன்றாம் அலை வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும், கூறியுள்ளார்.
இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மே மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.அதன்பிறகு மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக அதிக விலை வைத்து விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இந்த குற்றங்களை பணியாளர்கள் மீது சுமத்தி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு, மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும். அதன்பின்னரே கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் பிற துறைகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் இந்த மனுவினால், டாஸ்மாக் கடைகள் திறக்க தாமதம் ஏற்படாலம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மது பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil