மாதிரி நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 30 சதவீதத்திற்கு மேல் விற்பனை அதிகரித்தால், தேர்தல் கமிஷனின் ஆய்வுக்கு உட்படும் என்பதால், மதுபானக்கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க வேண்டாம் என, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நடத்தை விதிகள் குறித்து பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த நடத்தை விதிகளின் அடிப்படையில், மதுபானக்கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க வேண்டாம் என்று சில்லறை விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம்அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடைகளில் மதுபானம் இருப்பு 50% ஆக இருக்க வேண்டும் என்றும், சராசரி விற்பனையின் அடிப்படையில் இன்டென்ட் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் மதுபானக் கழக மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் முந்தைய ஆண்டை விட ஒரு நாளில் சுமார் 25% விற்பனை அதிகரிப்பு சாதாரணமாகக் கருதப்படுவதால், எதையும் சந்தேகத்துடனேயே பார்க்க நேரிடும் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விற்பனை கடைகள் மற்றும் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்கள் சரியான வேலை நேரத்தை கடைபிடிக்க வேண்டும். மதியம் முதல் இரவு 10 மணி வரை மற்றும் சில்லறை கடைகள் மதுபானங்களை பார்களில் வைக்கக்கூடாது என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“