கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச் இறுதியில் இருந்து இந்தியா முழுவதும் பொது முடக்கத்தில் உள்ளது. இந்நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது தளர்வுகளுடன் கூடிய முடக்கம் அமலில் உள்ளது. இதனையடுத்து, பரவலான மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே நிதி சிக்கலில் இருக்கும் தமிழக அரசும், கடந்த 7-ஆம் தேதி டாஸ்மாக்கை திறந்தது. முன்னதாக இதற்கு எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும், பெண்கள் தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பின.இறப்புக்கு 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை, என்ற சட்டம் ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக இடைவெளியை கொஞ்சம் கூட பின்பற்றாமல், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழிந்தது.
உங்கள் கனவுக்கு ஏற்ப வாய்ப்பு: எஸ்பிஐ-யின் இந்த சேமிப்பு வசதி தெரியுமா?
சென்னையின் கொரோனா பரவலை மனதில் வைத்து, அங்கு மட்டும் டாஸ்மாக் செயல்படவில்லை. 40 நாட்களாக மதுவை மறந்திருந்த குடிமகன்கள், 7-ம் தேதி மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறினர். இதனால் முதல் நாளிலேயே 170 கோடி வருவாய்,, தமிழக அரசுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் இருக்க, ஒரே நாளில் டாஸ்மாக் வியாபாரம் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் மது விற்பனை கொரோனா வைரஸ் பரவுவதற்கு இன்னும் எளிமையாக இருக்கும், என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக, மகாராஷ்டிராவில் டாஸ்மாக்கை திறந்த இரண்டாவது நாள், மீண்டும் மூடி விட்டார்கள்.
இத்தனை நாள் அமைதியாக இருந்தவர்கள் மது அருந்திய பின் பல பிரச்சனைகளுக்கு காரணமாயினர். இதனால் கடந்த 7ஆம் தேதி தமிழகம் முழுவதும், பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அப்போது 7-ம் தேதி நடந்த குற்றச் சம்பவங்கள், அனைத்தும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் பலவற்றிற்கு அனுமதி இல்லாத நிலையில், டாஸ்மாக்கிற்கு அனுமதி அளித்தது ஏனென்று மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது முடக்க முடியும் வரை, டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆன்லைனில் மது விற்பனை செய்ய தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதுநாள் வரை தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை இல்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி, டோக்கன் பெற்றவர்களும் 7-ம் தேதி வரிசையில் நின்று தான் மதுபாட்டில்களை பெற்றனர். ஆன்லைனில் மது விற்பனை செய்வதென்றால், டோர் டெலிவரி செய்வதற்கு ஏற்றபடி தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதற்கிடையே உணவு டெலிவரி ஆப்பான ஸோமேட்டோ, இந்த சேவையை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு விநியோக நிறுவனமான ஸோமேட்டோ, கொரோனா காலத்தில் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்து வருகிறது.
இதற்கிடையே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் மதுவை, வீட்டில் டெலிவரி செய்ய ஸோமேட்டோ, முன் வந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தமிழகத்தில் சாத்தியமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. முன்னதாக தமிழக அரசு, ஆவின் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து, பெற்றுக் கொள்ளும் வழியை அறிமுகப்படுத்தியது. ஆனால் மதுவை வீட்டிற்கு டெலிவரி செய்வதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பெரும்பாலானவர்கள் வீட்டிற்கு வந்து மது டெலிவரி செய்வதை விரும்பமாட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் வீட்டில் இருப்பதால், இன்னும் பிரச்சனை அதிகமாகும். அதோடு சாமானிய குடிமகன்களுக்கு ஆன்லைன் குறித்த, விழிப்புணர்வு கிடையாது.
மலிவு விலையில் மத்திய அரசு மருந்துகள்: உங்க அவசரத்திற்கு ஆன்லைனில் ‘புக்’ செய்யுங்க!
ஆகையால் தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என தெரிகிறது. ஆனால் மது விற்பனை குறித்த வேறொரு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு, காணொளி வாயிலாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து, ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும், பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும், என நீதிபதி அறிவுறுத்தினார். ஆகையால் தற்போது தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, ஆவலுடன் இருக்கிறார்கள் குடிமகன்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamil nadu tasmac online booking alcohol home delivery