Advertisment

செப்டம்பர் 29-ம் தேதி 10,000 ஆசிரியர்கள் கோட்டை நோக்கி பேரணி; செயற்குழு கூட்டத்தில் முடிவு

தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க அரசு முன்வர வேண்டும்; ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Teachers association

தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க அரசு முன்வர வேண்டும்; ஆசிரியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்ட்ரோல்மென்ட் அருகில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.

Advertisment

முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

இதையும் படியுங்கள்: மகளிர் உரிமைத் தொகை ரூ 1000: விண்ணப்பிக்க அவகாசம் முடிந்தது; வீடு தேடி வரும் கள ஆய்வுக் குழு

தி.மு.க தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றது. கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.

publive-image

மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை. இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புகள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எவ்வித பயன்களையும் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடக்க கல்வி துறையில் நடைமுறையில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இத்திட்டத்தால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து நாள்தோறும் இணையவழியில் தேர்வு நடத்துவதும், மதிப்பீடு செய்வதுமே நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் இ.எம்.ஐ.எஸ் இணையதளத்தில் தேவையற்ற பல்வேறு புள்ளி விவரங்களை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், ஆசிரியர்கள் நாள் முழுவதும் புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியையே செய்ய வேண்டி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இணையதளத்தில் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

publive-image

அதேபோன்று ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment