குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை, எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எஃப்) குடா புறக்காவல் நிலையத்தையும் ராபர் தாலுகாவின் லோத்ராணி கிராமத்தையும் இணைக்கும் சாலையில், மாநில காவல்துறையின் உளவுப் பிரிவினரால் தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: களத்தில் இறங்கிய கமிஷனர்: திருச்சியில் ரூ.1.72 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்; 37 பேர் கைது
மாநில புலனாய்வுப் பிரிவின் ஒரு குழு, எல்லைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, லோத்ராணி கிராமத்தை நோக்கி அந்த நபர் நடந்து செல்வதைக் கண்டனர். அந்த நபர் அந்தப்பகுதிக்கு வந்தது குறித்து சரியான பதில் அளிக்காததால், அவர் பாலசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தின. அந்தப் பகுதியில் அவர் நடமாடியதன் பின்னணியைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கட்ச்-கிழக்கு போலீஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று சர்வதேச எல்லையில் சுற்றித் திரிந்ததால் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கட்ச்க்கு வருவதைப் பற்றி அதிகம் தெரிவிக்கவில்லை. இப்போது உள்ளூர் காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளால் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று கட்ச்-கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறினார்.
உள்ளூர் போலீசார் அவரது தோள் பையை சோதனையிட்டதில், கட்ச் எல்லையோர பகுதி மற்றும் பாகிஸ்தானின் பக்கத்து கிராமங்களான நகர்பர்கர் மற்றும் இஸ்லாம்கோட் ஆகிய பகுதிகள் அடங்கிய கையால் வரையப்பட்ட மேப், ஸ்க்ரூடிரைவர், ஸ்பேனர், கட்டிங் பிளேயர், கத்தரிக்கோல், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு மற்றும் சர்வதேச டெபிட் கார்டு உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பையில் சில உணவுகள், மும்பையில் இருந்து சுரேந்திரநகர் செல்லும் பயணத்திற்கான ரயில் டிக்கெட் மற்றும் ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.