இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன்களின் சந்தைக் கடன் புள்ளி விவரங்களின் படி, 2023-24 முதல் காலாண்டில் ₹24,000 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2023-ன் ஏப்ரல்-ஜூன் மாதங்களில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்தக் கடன்கள் ₹1,99,950 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாநிலங்கள் தங்கள் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றன.
முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக ₹25,000 கோடி கடன் பெறுவதாகவும், தமிழ்நாடு ₹24,000 கோடியாகவும், ஆந்திரப் பிரதேசம் ₹20,000 கோடியாகவும் கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளது.
2022-23 நிதியாண்டிற்கான முதல் காலாண்டில், தமிழகம் வாங்கிய ரூ.8,000 கோடியை விட தற்போது ரூ.24,000 கோடி ரூபாய் அதிகம் என்று ICRA தெரிவித்துள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான கடன் வழிகாட்டுதல்களில் மத்திய அரசு செய்த மாற்றங்களால், 2022-23-ன் முதல் காலாண்டில் மாநிலங்களின் கடன்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில், 2023-24ஆம் ஆண்டில் ₹1,43,197.93 கோடி கடனாகப் பெற்று ₹51,331,79 கோடியைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாக ₹91,866.14 கோடி நிகரக் கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2023-24க்கான பட்ஜெட் மதிப்பீடுகளில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) நிதிப் பற்றாக்குறை 3.25% என மதிப்பிடப்பட்டுள்ளது.