வணிக கட்டிடங்களுக்கு வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், மாவட்டத் தலைவர் வி.ஸ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் மாநில இணைச் செயலாளர், இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வீ கோவிந்தராஜுலு பேசுகையில்; மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எ.ஸ்டி வரி சட்டம் பல்வேறு குழப்பங்களுடன் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வணிக கட்டிடங்களில் 80 சதவீத வணிகர்கள் வாடகை கட்டிடங்களில் வணிகம் செய்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள வாடகை கட்டணத்துடன் கூடுதலாக 18 சதவீத ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் வணிகர்கள் ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ் கந்தன், கே.எம்.எஸ் ஹக்கீம், ரெங்க விலாஸ் ரெங்கநாதன், மாநில இணை செயலாளர்கள் கமலக்கண்ணன், ஸ்ரீ ராமகுமார், ராஜாங்கம், திருப்பதி மற்றும் மண்டல, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் என 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“